Tuesday, May 6, 2008

சமற்கிருத வல்லாண்மை

தமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை. மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல் வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில் –வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக் குழப்பிவருகின்றனர்.


வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.


நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :

வலிந்து திணித்த / வழக்கு வீழ்த்தப்பட்ட
வடசொற்கள் / தமிழ்ச்சொற்கள்
தர்மம் /அறம்
கருணை /அருள்
நீதி /நயன்
தராசு /துலை
அங்கம் /உறுப்பு
யாகம் /வேள்வி
சந்தேகம் /ஐயம், ஐயுறவு
பயம்/ அச்சம்
தேகம் /யாக்கை, உடம்பு
சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்
உத்தியோகம்/ அலுவல்
மைத்துனன், மச்சான்/ அளியன்
புதன்/ அறிவன்
சங்கீதம்/ இசை
ராகம்/ பண்
ஆச்சரியம /வியப்பு
அமாவாசை /` காருவா
பௌர்ணமி /வெள்ளுவா
விருத்தாசம்/ பழமலை, முதுகுன்றம்
பிருகதீசுவரர் /பெருவுடையார்
பாதாதிகேசபரியந்தம் /அடிமுதல்முடிவரை
பஞ்சேந்திரியம்/ஐம்புலன்
துவஜாரோகணம் /கொடியேற்றம்
ஹாஸ்யரசம் /நகைச்சுவை
குலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு அறிக்கை (census report)
ஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி

இப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.
பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல தமிழ்ச்சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.

வலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும் இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும், தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன. ‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’ என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத் திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

வடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப்போனதால் புதிது புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச்சொற்கள் தடையின்றிக் கலந்து தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற, வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

நன்றி..... www.thamizhanambi.blogspot.com

No comments: