Sunday, May 11, 2008

சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு; சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு......... வே. மதிமாறன்

சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.
அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.

குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல்
மேனியற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.

இந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது, வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ?)

தேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமானாக காட்சி தருக்கிறார், சிவன்.
இந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.

“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.
“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் - தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.

(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)

63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.

அதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.

காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.
பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.
***

‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.

அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.
சிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும் முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.
இப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
இதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.

எல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)

***

“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.

அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.

ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.
அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.
ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.

“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்?” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.

நீ போய் பாட வேண்டியதுதானே? நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள்? உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.
தமிழா? சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை எப்படி பல்ல காட்டுதுன்னு பாத்தீயா? (ஜெயேந்திரன் பல்லு மாதிரி)
உன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.

மற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.

என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.

இப்படி பிஞ்சிலேயே பழுத்தவன், எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.


உடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க?” என்று கேட்டாரம்.

அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.

அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.

கோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.

***
`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`

பார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட - திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே?

ஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.

ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.

தீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.

இந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.


பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண்டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்‘ இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

www.mathimaran.wordpress.com

1 comment:

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News